பதிவு செய்த நாள்
09
ஜன
2018
11:01
குன்னுார்;நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்களின், கன்னி ஹெத்தையம்மன் திருவிழா, நேற்று காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்கள், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில், ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பாரம்பரியமாக நடந்து வரும் இந்த பண்டிகை பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னுார், எப்பநாடு, கேத்தி, பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் நடந்து வருகிறது.
இவற்றில், கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில், ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெகதளா, காரக்கொரை, பேரட்டி, மல்லிகொரை, மேல் பிக்கட்டி, ஓதனட்டி, மஞ்சுதளா, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நேற்று விழாவை நடத்தினர். அதில், மடியாரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில், அம்மனுக்கு உடுத்தும் சீலை கோவிலிலேயே நெய்து அம்மனுக்கு சார்த்தப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஹெத்தைதடியுடன் ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன், ஹெத்தையம்மனை, பூசாரி தலையில் சுமந்தவாறு, அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அவர்கள் வரும் வழிகளில் வேட்டிகளை விரித்து, அதன்மீது நடக்க வைத்தனர்.
தொடர்ந்து நடந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 15ம் தேதி, மறுஅணா கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில், 48 நாள் விரதம் இருந்தவர்கள் காணிக்கை செலுத்தி இந்த ஆண்டுக்கான பூஜை நிறைவு செய்வர். மேலும், ஹெத்தை பண்டிகைக்கு வர முடியாத பக்தர்கள் அன்று மறுஅணா எனப்படும் காணிக்கை செலுத்துவர். இதற்கான ஏற்பாடுகளை எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் செய்துள்ளனர்.