பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
திண்டுக்கல்: இறைவன் உங்களுடன் இருப்பதால் கோபத்தை விட்டு புன்சிரிப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என, பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூத்த தலைமை நிர்வாகி ஜானகி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் சக்தி சரோவர் தபோவனத்தில் நடந்த தியானத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு ஆசி வழங்கி அவர் பேசியதாவது: இறைவன் அழகான ஞனத்தை நமக்கு புரிய வைத்திருக்கிறார். பரமாத்மா, தாய், தந்தை, நண்பன், ஆசிரியர் ஆகிய ஐந்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். அமைதி, சுகம், சாந்தி ஆகியவற்றை அருள்கிறார். இதைதியானத்தின் மூலம் பெறலாம். இறைவன் நம்முடன் இருப்பதால் கோபத்தை விடுத்து புன்சிரிப்புடன் அன்பாக பழகுங்கள். கள்ளம், கபடமின்றி ஒரு குழந்தையை போல் மனதை வைத்து வாழுங்கள். விரக்தியை விடுங்கள். சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். நாம் இறைவனின் குழந்தைகள். வெறும் கையுடன் வந்தோம் என்பதை உணர்ந்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். நமது சமையல் கூடம் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டுமோ அது போல் நமது உடலையும் சைவ உணவு மூலம் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு துயரங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். தியாகம், தவம், அமைதி ஆகிய மூன்றும் நம்மை இளமையாக்கும். உயர்ந்த கனவுகளை காணுங்கள். நினைவுகள் உயரும் போது நீங்களும் உயர்வீர்கள். நமக்கு சொத்து என்பதே இறைவன் நம்முடன் இருப்பதுதான். உயிர்களிடம் இரக்கம், கருணை் கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் பிரம்மா குமாரிகள் நிர்வாக செயலாளர் மிருத்யுஞ்சயா, ஊடகத்துறை தலைவர் கர்ணா, மதுரை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி உட்பட பலர் பேசினர்.தென்மண்டல ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் உட்பட பலர் பங்கேற்றனர்.