பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
திருவிடந்தை:நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு, கொடிமர தேக்கு மரம், சென்னையிலேயே கிடைத்தது.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.இதன் மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன்; உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளனர். திருமணம், மகப்பேறு, ராகு கேது தோஷ, பரிகார தலமாக விளங்குகிறது.
பாரம்பரிய கோவிலான இதை, தொல்லியல் துறை பராமரிக்கிறது. வழிபாட்டில், இந்து சமய அறநிலையத் துறைநிர்வகிக்கிறது. கடந்த, 2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தொல்லியல் துறை, ரசாயனம் மூலம், சுவர் துாய்மை, மகாமண்டப மேல்தள சீரமைப்பு என, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. தற்போது, மண்டப தரைதளத்தில் பாறைகற்களை பதிக்கிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டதும், புதிய கொடிமரம் அமைக்க, அறநிலைய நிர்வாகம் முடிவெடுத்தது. சுமார், 50 அடி உயரம், 5-7 அடி சுற்றளவு தேக்குமரம் தேவைப்படும் நிலையில், ஓராண்டிற்கும் மேலாக, இத்துறையினர், தமிழக, கேரள வனத்தில் முயன்றும் கிடைக்காமல் சிக்கல் நீடித்தது.தற்போது, சென்னை மரவாடியில், தேவைக்கேற்ற அளவு பர்மா தேக்கு, நன்கொடையாளர் மூலம் கிடைத்துள்ளது.அங்கேயே, கொடி மர தயாரிப்பு பணிகள் நடப்பதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.