பதிவு செய்த நாள்
11
ஜன
2018
12:01
பொள்ளாச்சி:கோதவாடி குளத்து மண்ணெடுத்து, விவசாயிகள் நேர்த்தி கடனாக செலுத்தும், உருவார பொம்மைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.
மறைந்து வரும் மண்பாண்டங்கள் தயாரிப்பு தொழிலை தற்போதும், பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு வட்டார கிராமங்களில் மேற்கொண்டுள்ளனர்.நெகமம் அடுத்துள்ள ஆவலப்பம்பட்டி, பெரும்பதி, கொல்லபட்டி, பூசாரிபட்டி, கரப்பாடி, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் கோதவாடி, செட்டியக்காபாளையம், ஜக்கார்பாளையம் கிராமங்களிலும் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.மண் பானை தயாரிக்க பயன்படும் களிமண் கோதவாடி குளத்தில் கிடைக்கிறது. விவசாயிகளின் எதிர்ப்புக்கு இடையே, ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட அளவு மண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. களி மண்ணைக் கொண்டு சமையல் பாத்திரங்கள் (மண் சட்டிகள்), தண்ணீர் பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கப்படுகின்றன.நெருங்கும் பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பானை, உருவார பொம்மைகள் தயாரிப்பும் சூடுபிடித்துள்ளது. இவ்விழாவின் இரண்டாவது நாளாக மாட்டுப்பொங்கலும், மூன்றாவது நாள் காணும் பொங்கலும் நடக்கிறது.காணும் பொங்கலன்று, ஆல்கொண்டமால் கோவில்கள் அமைந்துள்ள கல்லாபுரம், கோதவாடி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் கால்நடைகள் சிறக்க, பால் பெருகி, கால்நடைகள் வளர்ப்புக்காக சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, நேர்த்தி கடன் செய்வது வழக்கம்.
இக்கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட ஆடு, மாடு, கன்றுக்குட்டி, நாய், குதிரை உள்ளிட்ட உருவகங்களை காணிக்கையாக செலுத்தி வணங்குவது வழக்கம். பொங்கலுக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில், கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.களி மண்ணால் கால்நடைகளின் உருவத்தை வடிவமைத்து, வெயிலில் காயவைத்து, தீயிலிட்டு சுட வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், தேவையான வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.தற்போது, சிங்கராம்பாளையம் பிரிவு, கோதவாடி பிரிவு மற்றும் பெரும்பதி, ஆவலப்பம்பட்டி பகுதியில் உருவார பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உருவார பொம்மைகள், 75 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோதவாடியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் சென்னியப்பன் கூறுகையில், குளத்தில் எடுக்கப்படும் மண்ணில் பசைத்தன்மை அதிகம் உள்ளது. மண்பாண்டம் மட்டுமல்லாது, பொம்மைகள் செய்வதற்கும் இம்மண் வளைந்து கொடுக்கிறது.எனவே தான், மண்பாண்ட தொழிலாளர்கள் கோதவாடி குளத்து மண்ணை தேடி வந்து, போராடி பெறுகின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொங்கல் பானை, உருவார பொம்மைகள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது, என்றார்.