பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
காரைக்கால்:திருநள்ளாரில் இன்று காலை நடைபெறும் சனிப்பெயர்ச்சியையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று காலை 7.51 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். முன்னதாக சனி பகவானுக்கு நல்லெண்ணெய், பால், பழங்கள், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து காலை 7.51 மணிக்கு மகா தீபாரதனை நடத்தப்படும். நேற்றிரவு தங்க காக்கை வாகனத்தில் சனிபகவான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமியை இன்று 21ம் தேதி நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய தர்ம தரிசனம், 100 மற்றும் 300 ரூபாய் கட்டண தரிசனம், வி.ஐ.பி.,க்கள் என நான்கு வழிகளில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் சீனியர் எஸ்.பி.,ஸ்ரீகாந்த் தலைமையில் 11 எஸ்.பி.க்கள், 35 இன்ஸ்பெக்டர்கள், 85 எஸ். ஐ.,க்கள், 1,300 சட்டம் ஒழுங்கு போலீசார், 250 ஐ.ஆர்.பி., போலீஸ், 100 மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், ஊர்காவல் படை என 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நளன்குளம், கோவில் பிரகாரங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.