பதிவு செய்த நாள்
15
ஜன
2018
11:01
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மெய்வழிச்சாலை கிராமத்தில் நேற்று நடந்த வித்தியாசமான பொங்கல் விழா நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளது, மெய்வழிச்சாலை கிராமம். 1940ம் ஆண்டில், மதுரையிலிருந்து வந்த காதர்பாட்சா என்பவர், அரசிடமிருந்து 99 ஏக்கர் நிலத்தை வாங்கி, இக்கிராமத்தை அமைத்தார்.அதில், புதுக்கோட்டை நகரைப்போல், நேரான தெருக்களை உருவாக்கினார். மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய் மதம் என்பதை தோற்றுவித்து, புதிய உறுப்பினர்களையும் சேர்த்தார். அவர் வைத்திருந்த விதிமுறைகளில், வேதங்களைப் பயில வேண்டும்; காவிவேட்டி, முண்டாசு கட்ட வேண்டும்.
வேதம் பயின்று முடித்த ஆண்கள் அனந்தர்கள் என்றும், பெண்கள் அனந்தகிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.பெண்கள் உடைகள் விஷயத்தில் பெரிய மாற்றம் இல்லை எனினும், வணங்கும் நேரத்தில் முக்காடு போட்டுக் கொள்வர். இதில் இந்து, இஸ்லாமியர், கிறித்துவர் என மும்மதங்ககளிலிருந்தும், 69 ஜாதிகளில் உள்ளவர்கள் இணைந்தனர்.இதில் சேர்ந்தவர்கள், மெய்வழிச்சாலையில் குடியமர்த்தப்பட்டனர். இங்குள்ள ஆண் - பெண்கள், படித்து பட்டம் பெற்று, எல்லாத்துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஆண், பெண் குழந்தைகளுக்கு பெயருக்கு முன், சாலை என்பதை சேர்த்து, பெயர் வைப்பார்கள்.இந்த ஊருக்குள், மின்சாரம் பயன்படுத்துவதில்லை. வீடுகள், ஐந்தடி சுவருடன் குடிசைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு கதவுகள் இல்லை.மெய்வழிச்சாலைக்குள், அரசு மின் இணைப்பு தர முன்வந்தது. பெற்றுக்கொள்ள மறுத்த இவர்கள், தற்போது, அறிவியல் வளர்ச்சி காரணமாக, சோலார் மின் விளக்கு இணைத்துள்ளனர். அந்த பகுதிகளை மிக சுத்தமாக வைத்திருக்கின்றனர்.உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், பொங்கலன்று அனைவரும் மெய்வழிச்சாலையின் மையத்தில் உள்ள பொன்னரங்க தேவாலயம் முன்பு ஒன்று கூடுவர். காதர் பாட்சாவின் மகனும், தற்போதைய சபைக்கரசருமான வர்க்கவான், அனைவருக்கும் ஒரே அளவிலான பொங்கல் பானையை கொடுத்து, பொங்கல் பண்டிகை துவக்கி வைப்பார்.அப்பகுதியில் உள்ள நீளமான அடுப்பில், எல்லோரும் பொங்கல் வைத்து முடிந்ததும், வரிசையாக ஒவ்வொரு பானையில் இருந்தும், ஒரு கரண்டி பொங்கலை எடுக்கும் சபைக்கரசர், அனைத்தையும் கலந்து, பின்னர், அனைவருக்கும், பிரசாதமாக வழங்குகிறார். ஒன்று கலந்த இந்தப் பொங்கலைப் போல, நாமெல்லோரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே, இந்தப் பிரசாதம்.வழக்கம் போல், இந்த ஆண்டும் மெய்வழிச்சாலையின் கலையுக ஆண்டு, 117ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.