பதிவு செய்த நாள்
15
ஜன
2018
11:01
மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் - கொமரலிங்கம் ரோட்டில், வடக்கு கண்ணாடிப்புத்துாரில் பரசுராமர் கோவில் உள்ளது. வளாகத்தில் வாள்முனி, செம்முனி, வேதமுனி, லாட முனி, கருமுனி, முத்துமுனி, ஜடாமுனி சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. 400 ஆண்டுகள் பழமையான இந்தக்கோவிலில், சிறுமிகளை சப்த கன்னிகளாக வணங்கும் நுாதன வழிபாடு உள்ளது. தை மாதம் முதல் தேதியன்று, ஏழு சிறுமிகளை தேர்வு செய்வர். அவர்களை கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் கன்னிமார் சிலைகளுக்கு முன்பு, அமர வைத்து, பூ, பொட்டு, குங்குமம், வளையல்கள், மாலைகள் போன்ற அலங்கார பொருட்களும், பிஸ்கட், மிட்டாய், பழங்கள் மற்றும் பலவகை தின்பண்டங்களும் தட்டில் வைத்து படையல் நடக்கிறது. பின், அந்த சிறுமிகளை சப்தகன்னிகளாக உருவகப்படுத்தி, நெற்றியில், திருநீறு, குங்குமம் இடுகின்றனர். தொடர்ந்து, இந்த சப்தகன்னிகளின் காலில் விழுந்து, ஆசி பெறுகின்றனர். இந்த நுாதன வழிபாடு குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், சிறுமிகள் உருவத்தில் சப்தகன்னிகள் ஆசி வழங்குவதாக பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இந்த வழிபாடு தவிர தை, சித்திரை முதல்தேதி, ஆடி 18, அட்ஷயதிருதியை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என்றனர்.