பதிவு செய்த நாள்
15
ஜன
2018
11:01
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ண தோரணங்களால் வீதியை அலங்கரித்து, புதிய மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து, மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது, அனைவருக்குமான ஆறுதல் வார்த்தைகளாக மட்டும் இருப்பதில்லை. அறுவடை மூலமாக குடும்பம் செழிக்கும் என்பதால், கஷ்டத்தை தீர்க்க உண்மையாக வழி கிடைக்கிறது. ஒளியை கொடுத்து, தானியங்களை விளைவித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில், விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்துதரப்பு மக்களும் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர்.
தமிழர் திருநாள் என்று போற்றப்படுவதால், தமிழகம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பொங்கல் திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியுள்ளது. பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என, மூன்று நாட்களும் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளும் கொண்டாடப்படுகிறது. இளைஞர் அமைப்புகள், நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் சார்பில், கிராமம் தோறும், வீதிகள் தோறும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வீதிகளில், எங்கு பார்த்தாலும், வீட்டு வாசலில், பெண்கள் வண்ண ேகாலமிட்டு, தை மகளை வரவேற்று மகிழ்ந்தனர். அதிகாலை, குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து, வழிபாடு நடத்த தயாராகினர்.
பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக பச்சரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது. செங்கரும்புகளை பொங்கல் வைக்கும் இடங்களில், கூடாரமாக நிறுத்தி வைத்திருந்தனர். பொங்கல் தயாரானதும், தலைவாழை இலையில், சர்க்கரை பொங்கலை படைத்து, அவல், பொரி, முறுக்கு போன்ற பதார்த்தங்களை படைத்து, தேங்காய், பழவகைகள் வைத்து வழிபட்டனர். அதன்பின், இனிப்புகளை அனைவருக்கும் கொடுத்து, பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். காலை, 8:00 மணி முதல், திருப்பூர் மாநகராட்சி வார்டுகள், அவிநாசி, சேவூர், மங்கலம், பல்லடம், பொங்கலுர் சுற்றுப்பகுதிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிறுவர், சிறுமியர், பெண்கள், இளைஞர்களுக்கு, விதவிதமான போட்டி நடத்தப்பட்டது. பலுான் ஊதி உடைத்தல்,லெமன் ஸ்பூன், வேக நடை போட்டி, ஓட்டப்பந்தயம், மியூசிக் சேர், சாக்கு ஓட்டம்,ஸ்லோ சைக்கிள், பெண்களுக்கான பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. மாலையில், சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடந்தது. குடியிருப்போர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில், விளையாட்டு போட்டியும், மக்கள் ஒற்றுமை பொங்கல் விழாவும் நடந்தது. பொது இடங்களில், அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்து, பொது வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர்.