பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
சென்னை: சென்னையில், ஒன்பதாவது ஹிந்து ஆன்மிக கண்காட்சி, வரும், 23ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. ஆன்மிக அன்பர்களால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிந்து ஆன்மிக கண்காட்சி, சென்னை, வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், வரும், 23ம் தேதி துவங்குகிறது. முதலில், இந்த கண்காட்சி, 2009ல், 300 அரங்குகளுடன் துவங்கியது. படிப்படியாக, மக்களின் ஆதரவால் வளர்ந்து, தற்போது, ஆயிரக்கணக்கான அரங்குகளுடனும், பலவகை நிகழ்ச்சிகளுடனும், ஒரு வாரம் நடக்கிறது.
ஜன., 23ம் தேதி, கவுதமானந்த மகாராஜ், ஓம்காரனந்தா ஆகியோர், ஹிந்து மதத்தின் சார்பிலும், திபெத்திய பவுத்த தலைவர், யோங்கே மிங்கியூர் ரின்போச்சே, ராஸ்டிரிய சீக்கிய சங்கத்தைச் சேர்ந்த, குருசரண் சிங்ஜி, சமண சமய பிரமுகர், சாம்னி ஸ்ரீநிதிஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கடந்த, 2014ல், முக்கியமான ஆறு குறிக்கோள்களுடன் கொண்டாடப்பட்டது. அதாவது, வனம், வனவிலங்கு பாதுகாப்பு, ஜீவராசிகளை பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெற்றோர், ஆசிரியரை வணங்குதல், பெண்மையை போற்றுதல், நாட்டுப்பற்றை வளர்த்தல் எனும், அந்த குறிக்கோள்கள், பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றன. இந்த ஆன்மிக, சேவைக் கண்காட்சியில், ஆயிரக்கணக்கான அமைப்புகள், ஆதரவு அளித்து வருகின்றன. முன்னோட்ட நிகழ்ச்சியாக, நாளை, மாலை 5:00 மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகில், விவேகானந்தர் ரத யாத்திரை பூஜை; 17ம் தேதி, கிண்டி, அண்ணா பல்கலையில், 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும், ஸ்ரீ கிருஷ்ணா யோகத்தான்; 18ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும், ஸ்ரீ கிருஷ்ணா யோகத்தான் நிகழ்ச்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் நடக்கிறது.இதுபோல், மேலும்,ஏழு நிகழ்ச்சிகள், 29ம் தேதி வரை, பல இடங்களில் நடக்கின்றன.