பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கோவை புறநகர் பகுதிகளில் கலாசார மணம் கமழ, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பட்டையை கிளப்பின.
சூலுாரில் உறியடித்து உற்சாகம்!
* சூலுார் பொங்கல் விழா குழு சார்பில், குழந்தைகளுக்கான கலைத்திறன் மற்றும் யோகாசனம், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், சீரணி கலையரங்கத்தில் நடந்தன. நேற்று காலை பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த உறியடி போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். சிறு நாடகங்கள், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று ஊர் நல ஒற்றுமை பேரணி நடக்கிறது.* முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், நடந்த பொங்கல் விழாவில், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தன.* சூலுார் நண்பர்கள் நற்பணி இயக்கத்தின் சார்பில் நடந்த பொங்கல் விழாவில், ரேக்ளா போட்டி நடந்தது. சிறுவர், சிறுமியருக்கான ஆடல் பாடல் நிகழ்ச்சி, அனைத்து தரப்பினரும் பங்கேற்ற உறியடி போட்டி நடந்தது.
* சோமனுார் கிருஷ்ணாபுரத்தில், நடந்த பொங்கல் விழாவில், வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
* சின்னியம்பாளையம் நுகர்வோர் உரிமை சங்கம் சார்பில், விளையாட்டு போட்டிகள், கயிறு இழுத்தல், நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.
* மாரியம்மன் கோவில் திடலில், பெண்கள், சிறுமிகளுக்கான போட்டிகள் நடந்தன. உறியடித்தல், பூப்பறித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
அன்னுாரில் பெண்கள் கும்மியடி!
அன்னுார் வட்டாரத்தில், பொங்கல் விழா கும்மியடித்தல், விளையாட்டு போட்டிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அன்னுார் அ.மு.காலனியில், பொது பொங்கல் வைக்கப்பட்டது. கும்மியடித்தல் நடந்தது. மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊஞ்சப்பாளையம் குழுவின் காவடி ஆட்டம் நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* அன்னுார் உப்புத்தோட்டத்தில் நடந்த கோலப்போட்டியில், 150 பெண்கள் பங்கேற்றனர். சமுதாய பொங்கல் வைத்து கும்மியடித்தனர். சிறுவர், சிறுமியருக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
* அன்னுார் தாசபளஞ்சிக சேவா சங்கத்தில், பொது பொங்கல் வைக்கப்பட்டு, பெண்கள் கும்மியடித்தனர். பஜனை நடந்தது. அடுப்பில்லா சமையல் போட்டி நடந்தது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டி நடந்தது. சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
* அருகம்பாளையத்தில், அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பில், பொது பொங்கல் வைக்கப்பட்டது. ஜமாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அன்னுார், கோவை ரோட்டில், ஒன்றிய தி.மு.க., சார்பில், சமுதாய பொங்கல் வைக்கப்பட்டது. ’பொங்கலோ பொங்கல்’ என்று பெண்கள் குலவையிட்டனர். ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* நல்லிசெட்டிபாளையம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், மதுரை வீரன் திடலில் பொதுப்பொங்கல் வைக்கப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டி நடந்தது. நிமிர்வு கலைக்குழுவின் பறையாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
* ஒட்டர்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த, பொங்கல் விழா கலை இலக்கிய போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அஸ்மா பேகம், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற சூர்யா, சைக்கிள் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சோயப் அக்தர், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சித்ரலேகா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். கரகாட்டம், காளியாட்டம், அய்யனார் ஆட்டம், மேஜிக் ேஷா ஆகியவை நடந்தன.
* கிருஷ்ணகவுண்டன் புதுாரில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
பெ.நா.பாளையத்தில் மாட்டுப்பொங்கல்!
பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் உள்ளிட்ட பகுதிகளில், பசு மற்றும் காளைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, கொம்புகளை சீவி வண்ணம் பூசி, கழுத்துக்கு சலங்கை கட்டி, புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்து, பொட்டு வைத்து வணங்கினர்.
* பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில் உள்ள, கால்நடை பண்ணையில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பண்ணை கருவிகளை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இடப்பட்டு இருந்தன. சூரியப் பொங்கலை தொடர்ந்து, சிறப்பு பூஜை நடத்தி கால்நடைகளின் நெற்றியில் பொட்டு வைத்து, வழிபாடு நடத்தினர். கால்நடைகளுக்கு பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் படையல்களாக வைக்கப்பட்டன. வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தாஜி மகராஜ், சுவாமி தத்பிரபானந்தாஜி மகராஜ் மற்றும் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
* காளிபாளையம் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. அதிகாலை சக்தி விநாயகருக்கு நடத்திய சிறப்பு பூஜையை அடுத்து பொங்கல் வைக்கப்பட்டது. குழந்தைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், முறுக்கு உண்பது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
* நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதிகாலனியில், தீனதயாள் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 13ம் ஆண்டு பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில், உறி அடித்தல், விளையாட்டுப்போட்டிகள், குழந்தைகளுக்கான பரத நாட்டியம், அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தீனதயாள் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
* நாயக்கன்பாளையம் பொங்கல் விழாக்குழு சார்பில், விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. முன்னாள் கவுன்சிலர் ராஜசேகர் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கூடலுார் பேரூராட்சி முன்னாள் தலைவர் அறிவரசு, பரிசுகள் வழங்கினார்.
* சின்னத்தடாகம், துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், சிறப்பு பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.-- நமது நிருபர் குழு -