பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
ஆனைமலை;மார்கழி மாதம் துவங்கியதும் அதிகாலையில் எழுந்து, சிறுமியர் மற்றும் திருமணமாகாத பெண்கள் விநாயகர் கோவிலுக்குச் சென்று, மனமுருகி வேண்டுவர். பின், குடத்தில் எடுத்து சென்ற நீரை விநாயகருக்கு அபிேஷகமாக செய்து அருகம்புல்லை வைத்து வழிபடுவர். வீட்டுக்கு வந்ததும் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு, வீட்டு வாசலில் ஒற்றைப்படை எண்ணிக்கையில், பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து, அதற்கு பூசணி, செம்பருத்தி பூ வைப்பர். அதை கடவுளாக நினைத்து மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவதும் வழக்கம். சூரிய உதயத்துக்கு பின் மாட்டு சாணத்தில் செய்த பிள்ளையாரை எடுத்து வீட்டின் மேற்கூரையில் போட்டு விடுவர்.
பூப்பொங்கல் அன்று பெண்கள் ஒன்றிணைந்து உணவு உட்கொள்ளாமல், ஊருக்கு அருகிலுள்ள ஆற்றுக்கு தின்பண்டங்களுடன் செல்வார்கள்; செல்லும் வழியில், ’ஒரு குடம் தண்ணீர் ஊத்தி ஒரு பூ பூத்தது, இரண்டு குடம் தண்ணீர் ஊத்தி இரண்டு பூ பூத்தது,’ என பல கிராமிய பாட்டுகளை பாடியபடி ஆற்றுக்கு செல்வார்கள். ஆற்றோரத்திலுள்ள, ஆவாரம்பூ, ஆத்தரளிப்பூ உள்ளிட்டவையை பறித்துக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள்வார்கள். அதன்பின், மாலை நேரம் வீட்டுக்கு வந்து புத்தாடை உடுத்திக் கொண்டு, பொங்கல் வைத்து; கோலத்தை அலங்கரித்த பிள்ளையாரை கூடையில் வைத்து அதன் மீது ஆற்றங்கரையில் பறித்த பூ, பொங்கல், ஒரு துண்டு கரும்பு, அரசாணிக்காய் வைப்பர். அவற்றை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று, பெண்கள் வயதுக்கு ஏற்ப இணைந்து, வட்டமாக கூடைகளை வைத்துக் கொண்டு, கிராமிய பாடல்களை பாடிக்கொண்டு, கும்மி அடித்து கொண்டாடுவர்.
’ஓழையக்கா கொண்டையில ஒருசாரு தாழம்பூ, சித்தாடை தலைநிறைய முக்காடு’ என்பது போன்ற பாடல்களை பாடி, மேள தாளத்துடன் கும்மி ஆட்டத்தை நிறைவு செய்வார்கள். பின், அருகிலிலுள்ள வாய்க்கால், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பிள்ளையாரை விசர்ஜனம் செய்து பூப்பொங்கலை கொண்டாடி மகிழ்வர். இவ்வாறு, பல ஆண்டுகளாக கிராமப்புறங்களில் பூப்பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகரிக வளர்ச்சி ஏற்பட்டாலும், இன்றளவும் கிராம பகுதிகளில், நமது கலாச்சாரத்தை காக்கும் வகையில் பெண்கள் பூப்பொங்கலை பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மில் வீதி அருகேயுள்ள, விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும், பெண்கள் பூப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கோட்டூர் நகரப்புறமாக தோற்றமளித்தாலும் பெண்கள் கலாசாரத்தை காக்கும் வகையில், பிள்ளையாரை எடுத்து கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள குட்டையில் விசர்ஜனம் செய்கின்றனர்.
கோட்டூர் அடுத்த பொங்காளியூர் கிராமத்தில், ஊரின் நுழைவுப் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில், வயதானவர்கள் முதற்கொண்டு, அனைத்து தரப்பு பெண்களும், பழைய கும்மி பாட்டுகளை பாடிக்கொண்டு பூப்பொங்கலை சிறப்பாக கொண்டாகின்றனர். அருகிலுள்ள வாய்க்கால்கள், பொன்னாலம்மன்துறை ஆற்றில் பிள்ளையாரை விசர்ஜனம் செய்கின்றனர். ஆனைமலை பெருமாள்சுவாமி கரடில் பூப்பொங்கலுக்கு ஒவ்வொரு ஆண்டும், பெண்கள் பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிட்டு, மலையேறி பெருமாளை தரிசிப்பது வழக்கம். பொதுமக்களுக்கு மற்றும் பூப்பொங்கல் கொண்டாடும் பெண்களுக்கு, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடத்தப்படும். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.
கால்நடைகள் ஆரோக்கியம்: ஆனைமலை அடுத்த காளியாபுரத்திலுள்ள, மாட்டேகவுண்டன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பூப்பொங்கலை விவசாயிகள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மாட்டு வண்டி பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று மாடுகள் நலமுடன் இருக்கவும், ஆரோக்கியம் பெறவும் மாட்டேகவுண்டன் சுவாமியை வழிபடுகின்றனர். மாடு, கோழி, ஆடு உள்ளிட்டவையின் உருவ பொம்மைகளை வைத்து, கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று (16ம் தேதி) காலை முதல் சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கிராமப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்பகுதியிலும் பழமையான வழக்கப்படி பூப்பொங்கல் கொண்டாட வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பூப்பொங்கல் சிறப்பு அழியாமல் நிலைத்திருக்கும்.