பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
பழநி, பொங்கல் விழாவை முன்னிட்டு, பழநி அருகே காவலப்பட்டியில், காளை மாடுகளை தெய்வமாக வழிபடும், சலங்கைமாடு ஆட்டம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பழநி நெய்க்காரப்பட்டி அருகே காவலப்பட்டியில் ராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் சார்பாக, ஊர் பொது மைதானத்தில் சலங்கை மாடு ஆட்டம் நடக்கிறது. அதன்படி தை முதல்நாள் அவ்வூரில் பசு ஈன்ற காளை கன்றுகளை சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடுவதை 300 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு விடப்படும் காளைகளுக்கு அடையாளமாக காதில் சிறிய ’கீறல்’ செய்துவிடுகின்றனர். பின் அந்த கன்றுகள், காடு, மேடு, வயல்வெளிகளில் சுற்றித்திரிந்து வளர்கின்றன. சாமிக்கு நேர்த்து விடப்பட்ட காளைகளை பொங்கலுக்கு இருவாரங்களுக்கு முன்னதாக பிடித்துவந்து, அவற்றின் கால்களில் சலங்கை கட்டி ஆட்டப்பயிற்சி அளிக்கின்றனர். இவ்வாண்டு பொங்கல் விழாவில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஊர் மைதானத்தில் பெரியவர்கள், இளைஞர்கள் சலங்கை மாடு ஆட்டத்தில் பங்கேற்றனர். வீடுகளில் பெண்கள் காளைமாடுகளை தெய்வமாக பாவித்து, அவற்றிற்கு பச்சரிசி பொங்கல், வாழைப்பழம் படையல் செய்து காலில் விழுந்து ஆசி பெற்றனர். இளைஞர்களின் தேவராட்டம் நடந்தது. ஏற்பாடுகளை ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் செய்திருந்தனர்.