பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
திருக்கோவிலுார்: விழுப்புரம், திருக்கோவிலுார் உள்ளிட்ட கோவில்களில் ‚ மாட்டுபொங்கலை முன்னிட்டு‚ சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாட்டு பொங்கலை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு‚ விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கடஸ்தாபனம், நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.உற்சவ மூர்த்தி சிவானந்தவள்ளி சமேத சந்திரசேகரர்‚ நந்திகேஸ்வரர் முன்பாக எழுந்தருளினார். தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு சோடசோபபச்சார தீபாராதனை‚ வீதியுலா நடந்தது. ஆண்டாள் உற்சவம்: பொங்கல் திருநாளின் மறுநாளான நேற்று கனு பொங்கல் விழாவை முன்னிட்டு, விழுப்புரம் ஜனகவள்ளி சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் உற்சவம் நடந்தது.
இதில் சிறப்பு தீபாராதனை நடந்த பின், பெண் பக்தர்களுக்கு, மாங்கல்ய சரடு மற்றும் ஆண்களுக்கு கையில் அணியும் கயிறு வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவூடல் விழா: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திருவூடல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 5:00 மணியளவில் மூலவர் ராமநாதீஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் ஞானாம்பிகை அம்மன், ராமநாதீஸ்வரர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், வீதியுலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.