பதிவு செய்த நாள்
17
ஜன
2018
11:01
பேரூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி சிலை முன், நேற்று காணும் பொங்கல் விழா, கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ரேக்ளா வண்டியில் வந்த சத்குரு, விழாவில் பங்கேற்று, பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: நம் மண்ணை வளப்படுத்தும் ஒரே வழி, மண்ணில் போதுமான அளவு கால்நடைகள் வைத்திருப்பதே. நாட்டு மாடுகள் காக்கப்படவேண்டும்; அவற்றின் பால், சாணம், கோமியம் மருத்துவ குணமுடையது. நம் நாட்டில், 120 வகை நாட்டு மாடுகள் இருந்தன. அதில், 37 வகை மாடுகளே தற்போது உள்ளன. இவற்றை பாதுகாப்பது மிக அவசியம். அவை அழிந்து கொண்டு இருக்கின்றன என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இங்கு, சில வகை நாட்டு மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சத்குரு பேசினார். விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர். கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சம்ஸ்க்கிரிதி மற்றும் ஈஷா பள்ளி மாணவர்களின் இசைக்கச்சேரி நடந்தது. இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.