பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் சுவாமி, குழிப்பாந்தண்டலத்திற்கு, நேற்று பார்வேட்டை சென்றார். மாமல்லபுரம், 108 வைணவ திருத்தலங்களில், 63ம் தலமாக விளங்குகிறது. இவ்வூர் கோவிலில் வீற்றுள்ள ஸ்தலசயன பெருமாள், சுற்றுப்புற பகுதி பக்தர்களுக்கு அருள்புரிந்து, அவரது கோவிலுக்குரிய நிலங்களை பார்வையிட்டு, முயல் வேட்டையாட, காணும் பொங்கல் நாளில், பார்வேட்டை செல்கிறார். பார் வேட்டை உற்சவ நாளான நேற்று, கோவில் நடை அதிகாலை, 3:00 மணிக்கு திறக்கப்பட்டு, வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, ராஜ அலங்கார சுவாமி, அலங்கார பல்லக்கில் எழுந்தருளி, காலை, 4:00 மணிக்கு கோவிலிலிருந்து புறப்பட்டார். பூஞ்சேரி, பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளைபெற்றாள், காரணை, குச்சிக்காடு பகுதி வழியே அவர் கடந்து செல்ல, பக்தர்கள் அர்ச்சனை செய்து, சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இறுதியாக, குழிப்பாந்தண்டலத்தில் உள்ள, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலை, மாலை அடைந்தார். அக்கோவிலில் சிறப்பு அபிஷேக திருமஞ்சனத்தைத் தொடர்ந்து, அலங்கார முயலை வேட்டையாடினார். அங்கு இரவில் வீதியுலா சென்று, இன்று அதிகாலை மாமல்லபுரம் கோவிலை அடைந்தார்.