பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
புதுடில்லி,: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, முஸ்லிம்கள் மேற்கொள்ளும், ’ஹஜ்’ புனித பயணத்துக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை, இந்தாண்டு முதல் நிறுத்துவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடான, சவுதி அரேபியாவின், மெக்காவுக்கு, ’ஹஜ்’ என்ற புனித பயணத்தை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படுவதாக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி, நேற்று தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:முந்தைய,காங்., ஆட்சியின் போது, ’ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம், 2012ல் தீர்ப்பு அளித்தது. இது தொடர்பாக, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு முதல், ஹஜ் பயணத்துக்கான மானியத்தை நிறுத்துவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சலுகை: மானியத்தை நிறுத்தினாலும், இந்த ஆண்டு, 1.75 லட்சம் பேர், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். விமானத்துடன், கப்பல் மூலம் பயணம் மேற்கொள்வது குறித்து, சவுதி அரேபிய அரசுடன் பேசி வருகிறோம். முஸ்லிம்களுக்கு சலுகைகள் அளித்து திருப்திப்படுத்துவதை விட, அவர்களுக்குஅதிகாரம் அளிக்கவே, மத்திய அரசு விரும்புகிறது. தற்போது ஹஜ் சலுகை நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படும், 700 கோடி ரூபாய், சிறுபான்மையினரின் கல்விக்காக, குறிப்பாக, பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அரசின் இந்த முடிவை, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்றுள்ளது. ”இத்தனை ஆண்டுகளாக, நாங்கள் அரசிடமிருந்து மானியத்தை பெற்று வந்ததாக தவறாக நினைக்கப்பட்டு வந்தது. ”அரசின் இந்த முடிவால், ’ஏர் - இந்தியா’வுக்கு பலன் கிடைக்கும்,” என,, வாரியத்தின் தலைவர், கமால் பரூக்கி தெரிவித்தார்.முன்னதாக, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண் துணையுடன் தான், ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை, மத்திய அரசு மாற்றியது.