பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
உடுமலை: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இங்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, தை அமாவாசை, மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது; மும்மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனையொட்டி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்து, வழிபாடு செய்தனர். ஒரே நேரத்தில், அதிகப்படியான மக்கள், இங்கு வருகை புரிந்ததால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
காணும் பொங்கலையொட்டி திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைப்பகுதிகளில், நேற்று பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. தவிர, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப்படுகிறது. பொங்கல் விடுமுறையை உற்சாகமாக களிக்கும் வகையில், பலரும் தங்கள் குடும்பத்தினருடன் அருவிகள், ஆறுகள், என நீர் நிலைகளுக்குசென்று நீராடி மகிழ்வது, பலவகையான உணவுகளை எடுத்துச்சென்று உண்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று, காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள், பஞ்சலிங்கம் அருவியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். அருவியில், தண்ணீர் வரத்து சீராக இருந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேசமயம், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.