பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி கிராமம், சின்னாரபாளையத்தில், குறிப்பிட்ட பிரிவினர் இறந்த முன்னோரின் நினைவாக, நடுகல் நட்டு, மாட்டுபொங்கலுக்கு அடுத்தநாள் வரும் கரிநாளன்று, திருவிழா நடத்துவது வழக்கம். நேற்று நடந்த விழாவை முன்னிட்டு, கடந்த, 15 இரவு, 7:00 மணிக்கு தீர்த்தக்குடம், பஞ்சாமிர்த குடம், பால்குடம், பன்னீர்குடத்துடன் பெரும்பூஜை மற்றும் வாணவேடிக்கை நடந்தது. நேற்று காலை, 5:00 மணி முதல், 12:00 மணி வரை, முன்னோரின் சிலைகளுக்கு மாலை, வேட்டி, சேலை அணிவிக்கப்பட்டு வழிபாடு நடந்தது. பாண்டியர்களின் காலத்தில், போர்க்காலத்தில், உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக, நடுகல்நட்டு, அவர்களின் வீரம், புகழ் முதலியவை கல்லில் பொறிக்கப்பட்டு, உறவினர்கள் வழிபட்டு வந்தனர். அதேபோல், இன்னும் ஒரு சில பிரிவினர், இறந்த உறவினரின் நினைவாக, நடுகல் நட்டு வழிபடுவது குறிப்பிடத்தக்கது.