பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
பனமரத்துப்பட்டி: சேலம் அருகே, எதிரி படையை எதிர்த்து போரிடும் வீரத்துக்கு சான்றாக, போர்க்களக்காட்சியை விளக்கும் நடுகல் உள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில், கோட்டைக்கரடு அருகே, விவசாய தோட்டத்தில், போர்க்களக்காட்சியை விளக்கும் நடுகல் உள்ளது. அங்கு வசிக்கும் குமார், 35, சரவணக்குமார், 31, ஆகியோர், அதை, கடவுள் போல் பாவித்து, பூஜை செய்து வழிபட்டு பாதுகாக்கின்றனர். அது, நம் பண்பாடு, கலை, வீரம், உள்ளூர் வரலாறு ஆகியவற்றை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. கோட்டைக்கரடு, பழங்காலத்தில் அரசர்களின் ஆயுத கிடங்காகவும், அதன் மீது இருந்து, சுற்றுவட்டாரத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்ததாக செய்திகள் உள்ளன.
இதுகுறித்து, நடுகல் ஆய்வாளர், சேலம், சந்தியூர் கோவிந்தன் கூறியதாவது: கி.பி., 17ம், நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல், இரு நிலைகளை கொண்டுள்ளன. மேற்புற சிற்பத்தில், போர்க்களத்தில் அரசன் குதிரையில் அமர்ந்தபடி, எதிரே வரும் அம்புகளை தடுத்து, முன்னேறிச்செல்வது போல் உள்ளது. வால் மற்றும் முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு, குதிரை வேகமாக சீறிப்பாய்வதை போலவும், அருகே ஒரு சேவகன், அரசருக்கு குடைபிடித்து செல்வதை போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கீழ்புற சிற்பத்தில், வீரன் வில்லிலிருந்து, நாணை இழுத்து, அம்பு எய்வது போலவும், எதிராளியிடமிருந்து புறப்பட்ட ஏராளமான அம்புகள், வீரனை குத்த வருவது போலவும் உள்ளது. இக்காட்சி, படைகள் நிரம்பிய போர்க்களக்காட்சியை நினைவுபடுத்துகிறது. இறுதி கட்ட சண்டையில், நிறைய அம்புகள் குத்திய வீரன், வீரமரணமடைந்ததை அறிய முடிகிறது. வீரத்துக்கு சான்றாக, நடுகல் விளங்குகிறது. இதில், சிற்பத்தில் உள்ள வீரன், போர்படை தளபதியாகவோ, சிற்றரசனாகவோ இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே, சேவகர்கள் குடைபிடித்தபடி செல்வது வழக்கம். சேலம், நாமக்கல் மாவட்டங்களில், புலியை குத்துவது போலவும், வில் அம்புடன் நிற்பது, காட்டுப்பன்றியுடன் போரிடுவது என, பலவகை நடுகற்கள் கிடைத்துள்ளன. ஆனால், போர்க்களக்காட்சி, அம்புகள் நிறைய பறந்து வந்து, வீரனின் உடம்பில் பாய்வது போல், இங்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.