பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
மதுராந்தகம்: புகழ்பெற்ற மலை வையாவூர் மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா என, மதுராந்தகம், தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி, சட்டசபையில் கேள்வி எழுப்பினார். மதுராந்தகம் அடுத்துள்ளது, புகழ்பெற்ற மலை வையாவூர் பெருமாள் கோவில். மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோவிலின் சுற்றுச்சுவர் இரு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. அதுபோல, கோவில் மண்டபமும் சிதைந்து காணப்பட்டது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்ற மனக்குமுறல் பக்தர்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில், கோவிலின் நிலை குறித்து, சட்டசபையில், எம்.எல்.ஏ., புகழேந்தி கேள்வி எழுப்பினார். அப்போது, இந்த கோவிலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., கோரிக்கை உடடினடியாக பரிசீலிக்கப்பட்டு, கோவிலை சீரமைக்கும் பணி தொடங்கும் என, உறுதியளித்தார். முன்னதாக, மதுராந்தகம் நகராட்சிக்கு புதிய கட்டடம் வேண்டும் என்பது குறித்தும், சட்டசபையில், எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்தார்.