பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
புவனேஸ்வர்: புரி ஜகன்னாதர் கோவில் படத்துக்கு பதில், இஸ்கான் கோவில் படத்தை, போஸ்டரில் அச்சடித்ததற்காக, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மன்னிப்பு கேட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள மிக பிரபலமான கோவில்கள், சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், பாரத் தர்ஷன் என்ற பெயரில், யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை விளம்பரப்படுத்தும் நோக்கில், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த போஸ்டரில், ஒடிசா மாநிலம், புரியில் உள்ள, ஜகன்னாதர் கோவில் படத்துக்கு பதில், இஸ்கான் கோவிலின் படம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த, புரி கோவில் பூசாரி ஒருவர் அதிர்ச்சி அடைந்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் புகார் செய்தார். இதையடுத்து, இந்த போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்ட, ஐ.ஆர்.சி.டி.சி., நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.