பதிவு செய்த நாள்
19
ஜன
2018
10:01
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா ஜன.,27ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. இத்திருவிழாவிற்கான அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் ஜன.,17 மாலை கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு நடந்தது. நேற்று காலை விசாக கொறடு மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயகர் முன்பு ரிஷப யாகம் முடிந்து, சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டு அபிேஷக, ஆராதனை நடந்தது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி செயலாளர் விஜயராகவன், உப தலைவர் ராஜகோபால், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
திருவிழா நடக்கும் ஜன.,27 வரை தினமும் காலை சிம்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர்.ஜன.,26ல் தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும் முடிந்து, 16கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜன., 27 காலை ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக் குளத்தில் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை நடைபெறும். கொடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் கொடிப்பட்டம் யானை தெய்வானை மீது வைத்து ரத வீதிகளில் கொண்டு வருவது வழக்கம். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால் கொடிப்பட்டம் வீதி உலா நிகழ்ச்சி இல்லை.