பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டையில், 1,200 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு கும்ப ஆராதனை மற்றும் மஹா பூர்ணாஹூதியும், காலை, 9:00 மணியிலிருந்து, 9:45 மணிக்குள், கும்ப யாதாராதானம், கடம் புறப்பாடு, கோ பூஜை, கஜ பூஜை, மங்களாராத்தியுடன், லட்சுமி நரசிம்ம சுவாமி, ஆலய விமான கோபுரம், ராஜ கோபுரம், வேணுகோபால சுவாமி சன்னதி, கருடாழ்வார் சன்னதி, ஆஞ்சநேய சுவாமி சன்னதி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, திருமலா - திருப்பதி தேவஸ்தான வைகானச ஆகம பண்டிதர்கள், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கலெக்டர் கதிரவன், எம்.பி., அசோக்குமார், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நிர்வாக கமிட்டி உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி.,கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
* இதேபோல், காரிமங்கலம் அடுத்த எ.சப்பாணிப்பட்டியில், மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.