பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
செய்யூர் : செய்யூர் கந்தசுவாமி கோவிலில் சாய்ந்த கொடிமரம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என, ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூரில் உள்ளது, புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில். வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் வருகை தருகின்றனர்.தெற்கு நோக்கி அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். மூலஸ்தானம் கிழக்கு நோக்கி உள்ளது. இங்கு கந்தசுவாமி வள்ளி தெய்வானை சமேதரராகக் காட்சியளிக்கிறார்.மேலும், சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும் இங்குள்ளன. பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சி அளிக்கின்றனர். நந்திதேவர் சிலையும்
இக்கோவிலில் உண்டு.வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பாக இக்கோவிலில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி, நட்சத்திர வேதாளங்கள் அமைந்துள்ளன. அதுபோல, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒன்றாக, 27 பூத கண வேதாளங்கள் உள்ளன. இக்கோவிலின் கொடிமரம், கடந்த செப்டம்பரில் வீழ்ந்தது.இதை சரி செய்ய, இந்து அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. கொடி மரம் சாய்ந்து கிடப்பது, பக்தர்களுக்கு வேதனை அளிக்கிறது. எனவே, கொடிமரத்தை மீண்டும் புதிதாக நட்டு, கோவிலின் புனிதத்தைக் காக்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.