திருவெற்றியூர் கோயில் தீர்த்தக்குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதால் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2018 01:01
திருவாடானை : திருவெற்றியூர் கோயில் தீர்த்தக்குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்நாள் இரவு தங்கியிருந்து மறுநாள் அதிகாலை கோயில் முன்புள்ள குளத்தில் புனித நீராடி பின்பு அம்மனை வணங்குவது வழக்கம். இதனால் பக்தர்கள் நலன் கருதி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. குடியிருப்போர் துணிகளை துவைப்பது, ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிவகங்கையை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: பக்தர்கள் புனித நீராக பயன்படுத்தும் இக்குளத்தை அசுத்தம் செய்வதால் துர்நாற்றமாக உள்ளது. குளத்தின் படிகளில் ஆங்காங்கே கழிவு துணிகளும் கிடக்கிறது. தீர்த்தமாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழி இல்லாமல் நீராடி வருகிறோம் என்றனர். இக்குளத்தில் யாரும் துணி துவைக்க கூடாது என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் இச் செயலில் ஈடுபடுவதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.