பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
சென்னை : குடியரசு தினத்தை முன்னிட்டு, ஹிந்து ஆன்மிக கண்காட்சியில், ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. சென்னை, வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், ஒன்பதாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடந்து வருகிறது. இதில், நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற தலைப்பில், நேற்று நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், கர்னல் ராமன், கமாண்டர் ராதாகிருஷ்ணன், விங் கமாண்டர் ஸ்ரீகாந்த், ஹிந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை அறங்காவலர், ராஜலட் சுமி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும், மாணவ - மாணவியர், பரம்வீர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பின், பாரத மாதா வந்தனம் நடத்தப்பட்டது. இதையடுத்து, தேச பக்தி ஆவணப்படம் திரையிடப்பட்டது.விழாவின் மற்றொரு பிரிவாக, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், 2,000 பேருக்கு, அவ்வையார் பாடல், பன்னிரு திருமுறை, திருவருட்பா, தமிழ்த்தாய் வாழ்த்து, பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்கள் குறித்த போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு, தமிழகத்தின் சைவ மடாதிபதிகளான ஆதீனங்கள் தலைமையில், முருகன் - வள்ளி திருமண நிகழ்ச்சி நடந்தது.