பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான் பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி காந்தி வீதியில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகள் கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 24ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 25ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது.26ம் தேதி, நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், 27ம் தேதி, ஆறாம் மற்றும் ஏழாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.
கும்பாபிஷேக தினமான நேற்று காலை 4:30 மணிக்கு எட்டாம் கால அவப்ருதயாகம் துவங்கியது. 6:00 மணிக்கு பரிவார யாகம், மஹா பூர்ணாஹீதியும், 7:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. சரியாக 8:15 மணிக்கு ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. 8:30 மணிக்கு திரிபுரசுந்தரி, சமேத வேதபுரீஸ்வரர் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து. சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து. எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, இந்து அறநிலையத்துறை செயலர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.