பதிவு செய்த நாள்
31
ஜன
2018
10:01
பழநி: பழநி மலைக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகுத்தியும், மலர்க்காவடிகள் எடுத்தும் வந்த வண்ணம் உள்ளனர். சந்திரகிரகணம் காரண மாக, கோயிலில் இன்று மதியம் 12:00 மணி வரையே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
தைப்பூச திருவிழா பழநியில் ஜன.,25 முதல் பிப்.,3 வரை நடக்கிறது. வெளிமாவட்ட பக்தர்களின் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல 3 மணி நேரம் வரை காத்திருந்தனர். தரிசனத்திற்கு ஐந்து மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன்கோயில் பாரவேல் மண்டபத்தில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மாலை 6:22 மணி முதல் இரவு 8:40 மணி சந்திரகிரகணம் ஏற்படுகிறது. வழக்கமான ஆறு கால பூஜைகளும் முன்கூட்டியே நடக்கிறது. மதியம் 2:45மணிக்கு சாயரட்சை பூஜை செய்து, 3:45மணிக்கு நடைசாத்தப்படுகிறது. தரிசனத்திற்கு குவியும் பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க குடமுழுக்கு நினைவரங்கம் முதல் யானைப்பாதை வழியாக செல்லவும் படிப்பாதை வழியாக கீழே வரவும் ஒருவழிப்பாதையாக்கப்பட்டுள்ளது. மதியம் 3:45மணிக்கு நடைசாத்தப்படுவதால், மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.