பதிவு செய்த நாள்
31
ஜன
2018
11:01
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, மயான பூஜை நடந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை, நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. அருளாளிகள், அம்மனின் சூலம், பூஜை சாமான்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு சென்றனர்.
மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம், சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 1:45 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, அம்மன் திரு உருவத்தை மறைத்து வைத்திருந்த திரை விலக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அருளாளி எடுத்து வந்த தீர்த்தம், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.அருளாளி, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்வியபடி, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார்.சிதைக்கப்பட்ட அம்மனின் உருவத்திலிருந்து பிடி மண் எடுக்கப்பட்டது. அதிகாலை, 3:00 மணிக்கு மயான பூஜை நிறைவடைந்தது.சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை காலை, குண்டம் திருவிழா நடக்கிறது.