பதிவு செய்த நாள்
24
டிச
2011
10:12
ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த தேவனுடைய வார்த்தைகளும் அவருடைய அடியார்களுடைய வரலாறுகளும் நற்செய்திகளும் அடங்கியதே பைபிள் என்பதாகும். பைபிள் என்னும் ஆங்கில சொல்லுக்கு "புத்தகம் என்றே அர்த்தமாகும். இது "பிபிலியோ என்னும் கிரேக்க மொழியிலிருந்து பிழந்தது. அக்காலத்தில் நூல் என்றாலே அது கிறிஸ்தவ வேதாகமத்தையே குறிக்கும். உலக மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டதும், மிக அதிகமாக அச்சிடப்பட்டதும் பைபிள் என்ற நூலேயாகும். வேதாகமத்தில் "பழைய ஏற்பாடு, "புதிய ஏற்பாடு என்னும் இருபெரும் பிரிவுகள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 நூற்களைக் காணலாம். இவை பெரும்பாலும் எபிரேய மொழியிலேயெ எழுதப்பட்டுள்ளன. புதிய ஏற்பாடு 27 தனி நூல்களை கொண்டது. இந்நூற்கள் அனைத்தும் கிரேக்க மொழிலேயே அமைந்துள்ளன. போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்து புன்னக்காயலில் வாழ்ந்திருந்த என்ரிக்சு அடிகளார் வேதமாகச் செய்திகளை முதன்முதலாக அச்சு வடிவில் தமிழ் மொழியில் தந்தவராவார். என்ரிக்சு அடிகளார் 1578 ஆண்டு "தம்பிரான் வணக்கம் என்னும் நூலையும், 1579ல் "கிரிசித்தியாணி நூலையும், வெளியிட்டார், தொடர்ந்து 1586ல் "அடியார் வரலாறு என்ற நூலை நமது புன்னக்காயலிலேயே அச்சிட்டு வெளியிட்டதாக அறிகின்றோம். பின்னாளில் பைபிள் முழுவதையும் தமிழிலே அச்சிட்டு வெளியிடும் பெரும்பணியில் இங்கு வந்த இறைப்பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டார்கள்.
ஜெர்மானியரான சீகன்பால்கு ஐயர் புதிய ஏற்பாடு முழுமையையும் 1714ல் தமிழ்மொழியில் அச்சிட்டுத் தந்தார்கள். அவர் மறைவுக்குபின் அவரது உடன் ஊழியர்கள் பைபிள் மொத்தத்தையும் தமிழ்மொழியில் வெளியிட்டார்கள். சீசன்பால்கு ஐயர் தமிழறிந்த பண்டிதர்கள், அந்தணர்கள் மூலம் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து தைரியமாக பைபிளை மொழிபெயர்த்து தமிழப்படுத்திய பெருமைக்குரியவர். பிரெஷியாவில் தோன்றி நெல்லையில் தலைசிறந்த மிஷனைரியாக பணியாற்றிய இரேனியசு ஐயரவர்கள், திருபாற்கடல் நாதன் என்ற வைணவ பிள்ளைவர்களிடம் 14 ஆண்டுகள் தமிழ்பாடம் கற்று முழுவேதாகமத்தையும் தமிழேயே வெளியிட்டார்கள். பைபிளைத் தமிழ்மொழியில் செம்மைப்படுத்துவதற்காக ஹெச். பவர் தலைமையில் கனம் கால்டுவல் ஐயர் கனம் இ. சார்சண்ட், முத்தையாப்பிள்ளை ஆகியோரைக் கொண்ட முதல் மாநாடு 1866ல் பாளையங்கோட்டையில் நடந்தது. இம்மொழிபெயர்ப்பு பணியிலமர்த்தப்பட்ட முதற்தமிழர் முத்தையா பிள்ளை ஆவார். இவர் ஹெச்.ஏ. கிருஷ்ணபிள்ளையின் உடன் பிறந்த சகோதரராவார். குறிப்பாக நம்முடைய நெல்லை மேயர் விஜிலா சத்தியானந்தன் அவர்களின் பூட்டன் உறவுடையவர். அப்பெரியாரின் பணி போற்றுதலுக்குரியதாகும். இரண்டாம் திருப்புதல் மாநாடு கொடைக்கானலிலும், மூன்றாம், நான்காம் மாநாடுகள் குற்றாலத்தில் ஆரம்பித்து பாளையங்கோட்டையில் நிறைவுற்றது.
தனித்தமிழில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவரான டென்மார்க்கைச் சேர்ந்த ஐயரவர்கள் மைலாப்பூரில் தங்கியிருந்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி பிள்ளையவர்களின் துணைக்கொண்டு முழுமையான வேதாகமத்தைத் திருத்தம் செய்து வெளியிட்டார்கள் இதற்கு முன்னும், பின்னும் நிறைய மாற்றங்கள் தாங்கியதாய், உயர்ந்த தமிழ் உரைநடையிலும், வசன நடையிலும், வேதாகம நூல் வெளிவந்துள்ளது. வேதாகமங்கள் தமிழ் மொழிப்படுத்தும் வேலையில் நம்முடைய பாளையங்கோட்டை பெரும்பங்கு வகித்துள்ளது. 18ம் நூற்றாண்டில் ஐம்பது பேராக கிறிஸ்தவர்கள் வாழ்ந்த பாளையங்கோட்டை தற்போது அந்த பரமனின்கோட்டையாகவே காட்சியளிக்கிறது. சைவம் வளர்த்த பெரியார்கள் கிறிஸ்தவம் வளரவும் துணை நின்றார்கள் என்பதை நினைந்து போற்றுகிறோம்.