பதிவு செய்த நாள்
31
ஜன
2018
03:01
அருட் குழந்தையாக அவதரித்த ராமலிங்கர், சிறு வயதிலேயே சிதம்பர தரிசனம் செய்து, திருவருளை வெளிப்படுத்தினார்.சிறுவயதிற்கு உரிய குறும்பு தனத்துடன் விளங்கிய அவர், தனது அண்ணியின் அரவணைப்பில் கட்டுப்பட்டு, தியான வாழ்க்கை வாழத் துவங்கினார். அதில், முருகப் பெருமானின் தரிசனம் பெற்ற ராமலிங்கர், இறை வாழ்க்கை வாழ்வதற்கே தன்னை இறைவன் படைத்துள்ளதை உணர்ந்தார். ஆண்டவனின் அருள்வேண்டி, பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். பள்ளி செல்லாமல் நுால்களை படிக்க ஆரம்பித்தார். உயர் மறைகள் படித்தார். அவற்றில் மெய்ப்பொருள் தேடிப் பெற்றார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் எனும் பாடல் மூலம், பசி, நோய், ஏழ்மை, ஆதரவற்றவர் ஆகியோரை கண்டு, உள்ளம் துடித்தது உணர முடிகிறது. மற்றொரு புறம், மக்கள் அறியாமையால், கருப்பன், காளி, மாரி என கும்பிட்டு, கூத்தாடுவதை கண்டு வருந்தினார். பல சமய வழிபாட்டு சச்சரவுகள் பெருகி வருவதை கண்டு மனம் நொந்தார்.
அரியும், சிவனும் ஒண்ணு... அறியாதார் வாயில் மண்ணு என, உரைத்தவர் அவர். பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம் எனும் பாடல் மூலம், எல்லா சமயங்களும் ஒரே கடவுளை அடைய வழி தேடுகின்றன என்பதை விளக்கினார்.நமச்சிவாயம் எனும் மந்திரத்தை மனதில் நிறுத்தினார். அருட்பெரும் ஜோதியே, நம் இறைவன் என்பதை உணர்த்தினார். மாணிக்கவாசகர் சிவத்தை அடைந்ததை, பாடலாக வடித்துள்ளார்.அருட்பெரும்ஜோதியான ஆண்டவரை அடைவதற்கு, உரிய நெறியான சமரச சன்மார்க்க நெறிகளையும் படைத்தார் ராமலிங்கர். இதற்காக, வடலுாரில், தர்மசாலை, சத்திய ஞான சபையையும் நிறுவினார். 1872ம் ஆண்டு, ஜன., 25ம் தேதி, தைப்பூச திருநாளில், வடலுாரில் தீப ஒளி ஏற்றி, திருவருட்பிரகாச வள்ளலாராகப் போற்றப்பட்டார். ராமலிங்க அடிகளார், தான் பெற்ற இறை அனுபவங்களை, திருவருட்பா அகவல் என்ற நுாலாக படைத்தார்.
மேட்டுக்குப்பம், சித்திவளாகத் திருவறையில் தங்கிய ராமலிங்க அடிகளார், சில நாட்கள் தனிமையில் தியானித்திருப்பதும், வெளிவந்து சில நாட்கள், மக்களை ஆசிர்வதிப்பதுமாக இருந்தார். இந்த மண்ணுலகில், அவதரித்த பெரியவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாத, மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்த, திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான், கடைசியாக, கடைவிரித்தேன் கண்டுகொள்வார் யாருமில்லை என, கவலையுற்றே மறைந்தார்.