பதிவு செய்த நாள்
01
பிப்
2018
12:02
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், பக்தர்களின் அரோகரா கோஷத்துடன், தைப்பூச திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது
சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, அதிகாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு யாகம், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு, பால், தயிர், இளநீர், குங்குமம், பன்னீர் என, 16 வகை திரவியங்கள் மூலம், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. அம்மாபேட்டை, குமரகிரி, தண்டாயுதபாணி கோவிலில், சுவாமிக்கு ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் தண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை முருகனுக்கு, சிறப்பு அபி?ஷம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. அம்மாபேட்டை, ஸ்ரீமத் ராமலிங்க சுவாமி மடாலயத்தில், தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், கோமாதா பூஜை, 64 வகை மூலிகை திரவியங்களால் விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, சகல மூர்த்திகளுக்கும் கிரஹண பிராய சித்தாபிஷேகம் நடந்தது. பின், தீர்த்தக்குட ஊர்வலம், 108 லிட்டர் பால் அபிஷேகம், தங்கரத புறப்பாடு நடந்தது. தலைவாசல், வடசென்னிமலை, பாலசுப்ரமணியருக்கு, பால், பழம், பன்னீர், மூலிகை நீர் என, பல்வேறு அபிஷேக பூஜை நடந்தது. பின், வெள்ளி கவசத்துடன், ராஜ சிறப்பு அலங்காரத்தில், மூலவர் அருள்பாலித்தார். அதேபோல், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், பேர்லாண்ட்ஸ் முருகன் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா எனும் கோஷத்துடன், சுவாமியை தரிசித்தனர்.