பதிவு செய்த நாள்
01
பிப்
2018
12:02
ஈரோடு: கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், ஏராளமான பெண்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
ஈரோட்டில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கொங்காலம்மன் கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 29ல் பொங்கல், மாவிளக்கு ஊர்வலம், சிம்மவாகன புறப்பாடு நடந்தது. முக்கிய நாளான நேற்று, தைப்பூச தேரோட்டம் நடந்தது. கோவில் முன் அலங்கரித்து நிறுத்தப்பட்ட தேரில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, பெரியார் வீதி வழியாக காரை வாய்க்கால் சென்று, அங்கிருந்து திரும்பி கச்சேரிவீதி, வழியாக தேர் கோவிலுக்கு வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வடம் பிடித்தனர். பலர், அம்மன் அருள் வந்து ரோட்டில் ஆடியபடி வந்தனர். இதே போல், தைப்பூசம் விழா திண்டல் வேலாயுத சுவாமி கோவில் மற்றும் வலசு மலை முருகன் கோவிலிலும் நடந்தது. பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது.
* மொடக்குறிச்சி அருகே, அரச்சலூர் நாகமலையில், தீர்த்தகுமாரசுவாமி கோவில் உள்ளது. நேற்று தைப்பூச திருநாளை முன்னிட்டு, அரச்சலூர் அறச்சாலை அம்மன் கோவிலிலிருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர், அபிஷேகம், அன்னதானத்திற்கு தேவையான பூ, பழம், தேங்காய், அரிசி, பால், தயிர், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டது. காலை, 7:00 மணியளவில், நாகமலை ஆண்டவருக்கு பால் அபிஷேகம், தீபாராதனை, தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* பெருந்துறை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், நேற்று, 14ம் ஆண்டு, தைப்பூச திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, விஷேச அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, காஞ்சிக்கோவில் ரோடு விநாயகர் கோவிலில் இருந்து, காவடி ஆட்டத்துடன் ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, பால்குடம், பன்னீர் குடம் மற்றும் காவடி ஏந்தி வந்தனர். நிறைவாக, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழுவினர் செய்திருந்தனர்.