பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
மருதமலை : முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை கோவில் கருதப்படுகிறது. கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் பத்து நாள் தைப்பூசத் திருவிழா துவங்கியது. முதல் நாள் ஆறு நாட்கள், காலையில் யாக பூஜைகளும், திருவீதியுலாவும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடைதிறக்கப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகமும், ராஜ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலசபூஜை, பட்டுவஸ்திரம் சார்த்துதல், தாரைவார்த்து கொடுத்தல் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதன்பின், காலை, 11:00 மணிக்கு, வெள்ளையானையில் திருவீதியுலா வந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அமைச்சர் வேலுமணி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்களின் அரோகரா முழக்கங்களுடனும், பலவகையான வாத்தியங்களின் இசையுடனும் திருத்தேர் கோவிலைச் சுற்றி வந்தது. அட்டப்பாடி, நரசீபுரம், கணபதி, இடையர்பாளையம் போன்ற பல பகுதிகளில் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணி வரை சந்திரகிரகணம் இருந்ததால், மாலை 4:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதேபோல், தைப்பூசத்தையொட்டி, கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு, பால தண்டாயுதபாணி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 9:30 மணிக்கு தேர்த் திருவிழா நடந்தது. பேரூர் மருதாசல அடிகள் விநாயகர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பின்னர், பேரூர் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதிகளின் வழியே, தேர் உலா வந்தது.