பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
திருவிடந்தை: அறநிலையத் துறைக்குட்பட்ட நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், இணை ஆணையர் அசோக்குமார், ஆய்வு செய்தார். மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவிலாக விளங்குகிறது. கோவிலை, வழிபாடு சார்ந்து, இந்து சமய அறநிலையத்துறையும், பாரம்பரியம் சார்ந்து, தொல்லியல் துறையும் நிர்வகிக்கிறது. திருமண, மகப்பேறு, ராகு, கேது பரிகார கோவிலாக சிறப்பு பெற்றது.கடந்த, 2006ல் கும்பாபிஷேகம் நடந்து, மீண்டும், தற்போது நடத்தப்பட உள்ளது. எனவே, அறநிலைய நிர்வாகம் புதிய கொடிமரம் அமைக்க உள்ளது.கோவில் மண்டபம், தரைத்தள புனரமைப்பு பணிகளை, தொல்லியல் துறை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், அறநிலையத் துறை இணை ஆணையர், கே.பி.அசோக்குமார், தொல்லியல் துறை பணிகளை பார்வைஇட்டார். தொடர்ந்து, திருப்போரூர் கந்தசாமி, அனுமந்தபுரம் அகோரவீரபத்திரர், சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி கோவில்களிலும், ஆய்வு மேற்கொண்டார்.