பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
திருப்பூர்; சிவன்மலை கோவிலில், நேற்று இரண்டாவது நாள் தேரோட்டம் நடந்தது. இன்று தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடக்கிறது.தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அவ்வகையில் காங்கயம், சிவன்மலை கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. நேற்று இரண்டாவது நாள் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. இன்று மூன்றாவது தேரோட்டத்தில் தேர் நிலை சேருகிறது. நாளை திருவிழா நிகழ்ச்சியில் கால சந்தி பூஜை கோவிலில் நடைபெறவுள்ளது.
மலைக்கோவில் : மங்கலம் அருகேயுள்ள, வேலாயுதம்பாளையம், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று முன்தினம் திருத்தேர் கிரிவலம் நடந்தது. நேற்று திருவிழா நிகழ்ச்சியில் பரிவேட்டை நடந்தது. குதிரை வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்படுகிறது. வரும் 3ம் தேதி, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கவுள்ளது.
சென்னியாண்டவர் கோவில் : கருமத்தம்பட்டி அரு@க விராலிக்காடு, சென்னியாண்டவர் கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று காலை சுவாமி திருவீதியுலாவும், ஷடாக்ஷர ஹோமமும் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. மாலையில் பரிவேட்டை நிகழ்ச்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இன்று மகா தரிசனம், மாலை திருவிழா கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.