பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
கோத்தகிரி: கோத்தகிரி கொணவக்கரை நெல்லிமலை அருள்மிகு கல்யாண சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில், தைப்பூச திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, 25ம் தேதி நடந்த கிராம சாந்தி உற்சவ நிகழ்ச்சியில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று காலை, 6:00 மணிக்கு காரியங்கள் தடையின்றி நடைபெற கணபதி வேள்வி நடந்தது. 8:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நல்வாசனை திரவியங்களால் அபிேஷக பூஜை,தொடர்ந்து, சுவாமி திருக்கோவில் வலம் வந்தடைதல் நிகழ்ச்சி நடந்தது.
27ம் தேதி முதல், 30ம் தேதிவரை தினசரி காலை, 10:30 மணிக்கு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் முருகபெருமானுக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, பாலாபிேஷகமும், அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 10:30 மணிமுதல், 12:00 மணிக்குள் தெய்வ திருக்கல்யாணம் சுப வைபவம் நிகழ்ச்சி, பகல், 1:00 மணிக்குஅன்னதானம் நடந்தது. மாலை, 5:00 மணியளவில், முருக பெருமான் வள்ளிதெய்வானை வீதி ஊர்வலம், கொணவக்கரை வழியாக திருவீதி உலா வந்து, சன்னிதானத்தை அடைந்தது. நேற்று, காலை, 9:00 மணிக்கு, நல்வாசனை திரவியங்களால் அபிேஷக பூஜையும், 10:30 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. வரும், 7ம் தேதி, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
இதே போல, கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில், தேன்மலை முருகன் கோவில், நட்டக்கல் பால தண்டாயுதபாணி கோவில், மற்றும் காத்துகுளி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஐயனுக்கு அபிேஷக அலங்கார பூஜையும், திருத்தேர் வடம் பிடித்து வீதி உலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி ஐயனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை, அந்தந்த கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.