கூடலூர்: ஒருவருக்கு பசியைப் போக்க நாம் காரணமாக இருந்தால் அது சிறந்த செயலாகும். அதுவே தினமும் 50 பேருக்கு பசியைப் போக்க உணவு தந்தால் மிகவும் போற்றப்பட வேண்டிய விஷயம்தான். அது போன்ற ஒரு செயலை கூடலூரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கடந்த 20 ஆண்டாக செய்து வருகின்றனர்.
அர்ச்சகர் ஜெயராஜ் கூறும்போது, “கோயில் சார்பாக தினமும் தக்காளி சாதம், எலுமிச்சை, தேங்காய் சாதம், மல்லி சாதம், புளியோதரை தயாரித்து கோயில் வளாகத்தில் வைத்து கொடுக்கிறேன். பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வந்து இதனை வாங்கி பசியாற்றுகின்றனர். காலை 8:00 மணியில் இருந்து 9:00 மணி வரை தயார் நிலையில் இருக்கும். இதனை தருவது மன நிறைவை அளிக்கிறது. எனக்கு 48 வயதாக இருக்கும் போது துவங்கிய இந்த சேவை இன்றுவரை தொடர்கிறது. இதற்கு கோயில் நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த சேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே என் ஆசையாகும்,” என்றார். இவரிடம் பேச: 99941 93091.