பதிவு செய்த நாள்
03
பிப்
2018
12:02
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான், ஆண்டுதோறும், தை மாதத்தில் திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதே போல், நேற்று காலை, 10:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக சரவணபொய்கை திருக்குளத்தை அடைந்தார்.
பின்,பட்ட மாட்டு வண்டியில், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார்.ம.பொ.சி.,சாலை, சித்துார் சாலை மற்றும் பை ---பாஸ் சாலை வழியாக, மாலை, 5:00 மணிக்கு, தரணிவராகபுரத்திற்கு சென்றடைந்தார். மாலை, 6:00 மணிக்கு, கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முருகர் வீதியுலாவை முன்னிட்டு, கிராம தெரு முழுவதும், வண்ண விளக்குகள் மற்றும் வண்ண கோலங்கள் போடப்பட்டு, முருகனை வரவேற்றனர்.மேலும், உற்சவருக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பெண்கள் வழிபட்டனர்.நள்ளிரவில், உற்சவர் பெருமான் தரணிவராகபுரத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் மலைக்கோவிலை வந்தடைந்தார்.