பதிவு செய்த நாள்
03
பிப்
2018
12:02
வடலூர்: வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில உள்ள, வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத் திருமாளிகையில், திருஅறை தரிசனம் நடந்தது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு, 147வது தைப்பூச ஜோதி தரிசன விழா, கடந்த மாதம், 31ம் தேதி நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாக திருமாளிகையில், திருஅறை தரிசனம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, தரும சாலையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் வைத்து, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தோர் சுமந்தபடி, வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, மேட்டுக்குப்பம், சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக சென்றனர். பல்லக்கு மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் திருமாளிகையில், வள்ளலார் மறைந்த அறை முன் வைத்து, மதியம் 2:00 மணிக்கு திருஅறை திறக்கப்பட்டது. அதை, ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிவரை தரிசனம் நடைபெற்றது.