பதிவு செய்த நாள்
06
பிப்
2018
10:02
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, எடப்பாடி பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் 350 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.இவ்வாண்டு வழிபாட்டுக்காக ஜன.,31, தைப்பூச நாளில் புறப்பட்டு, இளநீர் காவடி, பால்காவடி, புஷ்பகாவடி, சர்க்கரை காவடி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டனர். புதுப்பேட்டை, எடப்பாடி, ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக நேற்று பழநிக்கு வந்தனர்.
15 டன் பஞ்சாமிர்தம் : மானுார் ஆற்றுப்பாலத்தில் காவடி பூஜை செய்து ஊர்வலமாக பழநி மலைக்கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக வழிபாட்டுக்குழுவினர் மூலம் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் 10டன் மலை வாழைப்பழம், மூன்று டன் பேரீச்சை, 15 மூடை கற்கண்டு, 10டன் சர்க்கரை மூடைகள், 12 டின்களில் தேன்,நெய், மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அபிஷேகம் செய்து அந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க உள்ளனர்.
மலைக்கோயிலில் சாயரட்சை கட்டளை பூஜை, ராஜஅலங்காரம், தங்க ரதம், இரவு 8:00 மணிக்கு ராக்கால கட்டளை பூஜையில் சுவாமிதரிசனம் செய்யும் இவர்கள் குடும்பத்துடன் மலைக்கோயிலில் தங்கி வழிபடுகின்றனர். நாளை தங்களது ஊருக்கு புறப்படுகின்றனர். பழநி மலைக்கோயிலில் பருவத ராஜகுல சமுதாய மக்கள் மட்டுமே தங்கி வழிபட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.