பதிவு செய்த நாள்
06
பிப்
2018
12:02
கூடுவாஞ்சேரி : ஆதனுாரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலை, இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனுாரில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் முருகர், அய்யப்பன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், நவகிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.இப்பகுதி வளர்ச்சி அடைவதால், கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். நன்கொடையாளர்களின் உதவியால், கோவில் விரிவுபடுத்தப்பட்டு, மாதந்தோறும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு நடக்கின்றன.இந்நிலையில், இக்கோவிலை நிர்வகிப்போர், வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பதாகவும், அறநிலைய துறையை இதை தன்வசப்படுத்த வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த அதிகாரிகள், சக்தி விநாயகர் கோவில் காணிக்கை உண்டியலுக்கு, சீல் வைத்து உள்ளனர். மேலும், பக்தர்களின் புகாருக்கான விளக்கத்தை, கோவில் நிர்வாகிகள், வரும், 17ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் ஆய்வாளரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும் என, அறிவிப்பும் ஒட்டியுள்ளனர்.