பதிவு செய்த நாள்
06
பிப்
2018
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை. அருணாசலேஸ்வரர் கோவிலில், கமாண்டோ படை போலீசார், நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தமிழ்நாடு அதிதீவிரப்பணி போலீசார் ஏழு பேர் அடங்கிய குழுவினர், நேற்று திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இவர்கள், கோவிலில் தீவிரவாத தாக்குதல், தீப்பிடிப்பு சம்பவம் போன்ற அசம்பாவித காலங்களில், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, ஆய்வு செய்தனர்.கோவில் வளாகத்தில், ஒவ்வொரு சன்னதியும் உள்ள இடம், அவற்றிற்கு உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழி, ரகசியமாக பதுங்க வசதியாக உள்ள இடம், நான்கு கோபுரங்கள் வழியாக உள்ளே செல்வது, வெளியே செல்வது, அதை ஒட்டியுள்ள தெருக்கள், கோவில் காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களையும் ஆய்வு செய்து, அதை, வீடியோ மற்றும் போட்டோ எடுத்தனர்.இந்த ஆய்வு இன்றும் நடக்க உள்ளது. ஆய்வின் போது, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உள்ளூர் போலீசாரும் பங்கேற்றனர்.