பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு நகைகள் அணிவிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், பல்லவர் கால வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவத்சலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்கள் உள்ளன.சைவ குரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற தலம் என்பதால், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இக்கோவிலுக்கென சொந்தமாக, தொன்மையான, பல வகையான நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சித்திரை பெருவிழா: சமயத்தில் மட்டும், உற்சவர் மற்றும் மூலவருக்கு, நகை அணிவதை போல், பிற விசேஷ நாட்களிலும் சுவாமிக்கு நகை அணிவிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து, பக்தர், வி.தரணிராஜன் கூறியதாவது: கோவிலுக்கு, பழங்காலத்து நகைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. இவை, திருவிழாவின் போது மட்டும், சுவாமிக்கு சார்த்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, நகை இருந்தும் சார்த்தப்படுவதில்லை. இதனால், கோவிலுக்கு சொந்தமான நகைகள் இருக்கின்றனவா, இல்லையா என, சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நகைகள் பத்திரமாக உள்ளன. திருவிழா காலங்களில் மட்டும், சுவாமிக்கு நகைகளை அணிவிக்கிறோம். யாருக்கும் சந்தேகம் இருப்பின், அதற்கான ஆதாரம் தருகிறோம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். -- நமது நிருபர் --