பதிவு செய்த நாள்
08
பிப்
2018
11:02
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயில், திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாகும். இதன் வளாகத்தில், ஸ்தல விருட்ஷம் ஆலமரம் உள்ளது. இந்த மரம், 100 ஆண்டுகள் பழமையானது. இந்த மரத்தின் கீழ் தான் ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் நடந்து வருகிறது. சிறப்பு வாய்ந்த, ஸ்தல விருட்ஷத்தின் கீழ், நேற்று இரவு, 7:30 மணிக்கு, பக்தர்கள், கற்பூரம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு, 8:20 மணிக்கு ஆலமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். ஏற்கனவே, பட்டுப் போன நிலையில் இருந்த இந்த, ஸ்தல விருட்ஷம், நேற்றைய தீ விபத்தில் மோசமான நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம், மதுரை மீனாட்சி கோயில் தீப்பிடித்ததன் பரபரப்பு அடங்காத நிலையில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், ஸ்தல விருட்ஷம் எரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.