பதிவு செய்த நாள்
08
பிப்
2018
11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. ஏற்கனவே 7,000 சதுர அடி இடிந்தது. மண்டபம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு விழும் அபாய கட்டத்தில் உள்ளது.
தீ விபத்தை ஆய்வு செய்த பின் கலெக்டர் வீரராகவராவ், ‘‘வீர வசந்தராய மண்டபம் தவிர ஏனைய பகுதிகளில் தீ விபத்தால் சேதமடையவில்லை. பழைய திருக்கல்யாண மண்டபம், ஆயிரம் கால் மண்டபத்துக்கு பாதிப்பில்லை,’’ என்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பசுபதி நாதர் சன்னதி அருகே, வலது பகுதியில் உருக்குலைந்த மேற்கூரையில் இருந்து இரண்டு கற்கள் விழுந்தன. இதையடுத்து தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராய மண்டபத்தின் எஞ்சிய மேற்கூரைகள், சுவாமி சன்னதி – பழைய திருக்கல்யாண மண்டப மேற்கூரைகள் கீழே விழாமல் தடுக்க இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கும் பணி நடக்கிறது. இதை கலெக்டர் வீரராகவராவ் நேற்று மாலை ஆய்வு செய்தார்.
அப்போது வீர வசந்தராயர் மண்டபம் முழுவதும் தீயில் சேதமடைந்தது கண்டறியப்பட்டது. இம்மண்டபத்தின் பின் பகுதி, ஆயிரம்கால் மண்டபத்தை ஒட்டியுள்ள சுவர்களில் முற்றிலும் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளது. தீ விபத்தால் வீர வசந்தராயர் மண்டபம், அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபம், தொட்டி நந்தி சிலை – சுவாமி சன்னதி பகுதிகள் உருக்குலைந்து விட்டதாகவும், அவற்றை முழுவதும் அகற்றி விட்டு மறு புனரமைப்பு பணிகள் செய்தால் தான் உறுதித்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்க முடியும் என ஆய்வில் ஈடுபட்டு வரும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.