கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை அமைக்கும் பணிகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2011 11:12
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ராஜகோபுர மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்டநாள் ஆசைக்கு சுமார் 142 லட்சம் ரூபாய் செலவில், 7 நிலைகளும் 91 அடி உயரமும் கொண்ட ராஜகோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 1999ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் நன்கொடையில் அஸ்திவாரப்பணிகள் சுமார் 12 லட்சத்திலும், முதல் கல்காரம் 40 லட்சத்திலும், இரண்டாவது கல்காரப்பணிகள் 38 லட்சத்திலும் முடிவடைந்தது. இதில் அரசின் மானியம் 10 லட்சம் மற்றும் பொதுமக்கள் நன்கொடை 68 லட்ச ரூபாயாகும். இதையடுத்து ராஜகோபுர ஏழு நிலைகளும் உபயதாரர்கள் வழியாக கட்டி முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலில் சுவாமி அம்பாள் சந்நிதி, விமானங்கள் மற்றும் உட்புற புதுப்பித்தல் பணிகள் சுமார் ரூ.60 லட்சத்திலும், கோயிலை சுற்றி சிமென்ட் தளம் அமைக்க ரூ.38 லட்சத்திலும், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.10 லட்சத்திலும் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை தொடர்ந்து சுமார் ரூ.60 லட்சம் செலவில் வரும் ஜன.29ந்தேதியன்று கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ராஜகோபுர மகாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளும் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் கிழக்குப்பகுதியில் செம்மண் கொட்டப்பட்டு தரைத்தளத்தை உயர்த்தி டோசர், ரோடு ரோலர் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு சமன் செய்யும் பணிகள் நடந்தது. இவ்விடத்தை சமன் செய்யும் பணிகளை தொடர்ந்து யாகசாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளன.இதற்கான பணிகளை செண்பகவல்லியம்மன் கோயில் ராஜகோபுர திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி துவக்கி வைத்தார். அப்போது தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தக்கார் வீரராஜன், ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் உள்பட பலர் இருந்தனர்.