பதிவு செய்த நாள்
26
டிச
2011
11:12
உத்தமபாளையம் : உத்தமபாளையம், சின்னமனூர், ராயப்பன்பட்டி பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் நடந்த சிறப்பு ஆடம்பர திருப்பலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் விண்ணரசி ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு, நேற்று காலையில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் பால்ராஜ் திருப்பலியை நிகழ்த்தினார். இயேசு பிறப்பின் தத்துவங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உலக ஒற்றுமைக்காகவும், சமாதானத்திற்கும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சி.எஸ்.ஐ., டி.யி.எல்.சி., சர்ச்களிலும் போதகர்கள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. அனுமந்தன்பட்டி தூய ஆவியானவர் ஆலயத்தில் பாதிரியார் பீட்டர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ராயப்பன்பட்டி புனித பனிமய அன்னை ஆலயத்தில், பாதிரியார் காந்தி சவரிமுத்து தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு திருப்பலியும், ஆராதனைகளும் நடந்தது. ஆலய வளாகத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் சிறப்பு ஆடம்பர திருப்பலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். எஸ்.யூ.எம்., ஆக்னஸ், அலோசியஸ் மேல்நிலைப்பள்ளிகளில் கிறிஸ்து பிறப்பின் அம்சங்களை விளக்கும் குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினர். சின்னமனூர் ஆர்.சி., சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.