பதிவு செய்த நாள்
09
பிப்
2018
02:02
கோயில் மண்டபத்தில் பிப்., 2 தீப்பிடித்ததில் 30 கடைகள் கருகின. மண்டபம் வலுவிழந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய 12 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடைகளில் தீத்தடுப்பு சாதனங்கள் இருந்தாலும், கோயில் தரப்பில் ஒருங்கிணைந்த தீயணைப்பு கருவிகள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. மதுரையில் இன்றும் ராணி மங்கம்மாள் கட்டிய கட்டடங்கள், திருமலை நாயக்கர் உருவாக்கிய மண்டபங்கள், ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஐம்பதாண்டுகள் பழமையான கல் கட்டடங்கள் உள்ளன. கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனை, பழைய போலீஸ் கமிஷனர், எஸ்.பி., அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், காந்தி மியூசியம், மீனாட்சி அம்மன் கோயில் அருகேஉள்ள பொதுப்பணித்துறை, வேளாண் துறை கட்டடங்கள், மாநகராட்சி பழைய தெற்கு மண்டல அலுவலகம் இருந்த கோட்டை வாசல் போன்றவை பழமையானவை.
2012 ஆண்டில் கலெக்டர் அலுவலக கருவூலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அணைக்க போதிய தீயணைப்பு கருவிகள் இல்லாததால் ஆவணங்கள் தீக்கிரையாகின. சில கட்டடங்களில் தீயணைப்பு கருவிகள் காட்சிப்பொருளாகவோ, காலாவதியானதாகவோ உள்ளது. புராதன கட்டடங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்க கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.