பதிவு செய்த நாள்
15
பிப்
2018
12:02
ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, 104 அடி உயரமுள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 104 அடி உயரமுள்ள மூங்கில் மரம் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு உப்பாற்றங்கரையில் கம்பத்துக்கு வஸ்திரம், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முறைதாரர்கள், அருளாளிகள் முன்னிலையில், கம்பம் ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் முன்னிலையில், காலை, 9:20 மணிக்கு, கொடிமரம் நடப்பட்டது. மார்ச், 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல், மதியம் அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், இரவு, 9:00 முதல், 10:00 மணிக்குள் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்வுகள் நடக்கின்றன. மார்ச், 3ம் தேதி காலை, 8:00 மணி முதல் 9:00 மணிக்குள், கங்கணம் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் பூ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவுள்ளனர். அதன்பின், திருத்தேர் ஊர்வலம், மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மார்ச், 5ம் தேதி போர் மன்னன் காவு நிகழ்ச்சி நடக்கிறது.